எனது பாட்டியின் நினைவாக நான் எழுதிய சிறுகதை...
பாட்டியின் கரங்கள்
எனக்கொரு பாட்டி இருந்தாள்! உங்களுக்குத் தெரியுமா?...எனக்கென்று ஒரேயொரு பாட்டிதான் இருந்தாள். எனக்கு பத்து வயதாகும்போது அவளுக்கு எழுபது வயதாகிவிட்டது. எழுபது வயதிலும் மிகவும் சுறுசுறுப்பாகவே நடமாடிக் கொண்டிருந்த என் பாட்டி கிராமத்திலுள்ள அத்தை வீட்டுக்குச் சென்றுவிட்டாள்.
இரண்டு மாதங்களின் பின்னர் தகவல் வந்தது.
பாட்டி இறந்துவிட்டாள்.
காரியம் செய்ய சொந்தங்கள் கூடின. பாட்டிக்கு புதுப்புடவை கட்டி, தலைமாட்டில் எண்ணெய் விளக்கு வைத்து அமைதியாகத் தூங்கினாள் பாட்டி.
ஆனால் எல்லோரும் அழுதனர். இறந்து போன பாட்டியை நினைத்து. எத்தனை முறை அழுதிருப்பாள் பாட்டி உயிருடன் இருந்தபோது. ஊர் வழக்கப்படி –பாட்டி-சுடுகாட்டுக்கு தூக்கிச் செல்லப்பட்டாள். என் பெரியப்பா கொண்டு சென்ற தண்ணீர்ப் பானை உடைக்கப்பட்ட பின் பாட்டி-மடுவில் இறக்கப்பட்டாள். அசையாமல் பாடையை விட்டு-பன்பாயின் இருபுறமும் பலர் பிடித்து மெதுமெதுவாக பாட்டியை மடுவினுள் வைத்தனர். சிறிது நொடிகள் அமைதியாய் நின்றபடி அழுதபின் மூன்று பிடி மண் அள்ளி பாட்டியின் மேல் போட்டனர். கூட்டம் கலைந்தது.
பாட்டியின் சிரித்த முகமும்-மூடிய கரங்களும் என் கண்ணிலே அடிக்கடி தோன்றி மறைந்தது.
காரியம் முடிந்து சில தினங்களின் பின்னர்-கிராமத்தை விட்டு வீட்டுக்கு வந்துவிட்டோம்.
பாட்டியின் நினைவு சிறிது சிறிதாக எம்மை விட்டு அகன்று கொண்டிருந்தது. சில மாதங்கள் கழிய –பாட்டி என்னிடம் பேச விரும்புவதாய் எனக்குத் தோன்றியது. கனவிலே வந்தாள்!...சிரிப்பாள்!..மூடிய கரங்களை காண்பிப்பாள்.
தொடர்ந்தும் பாட்டி - மூடிய கரங்களை என்னிடம் காண்பித்தாள். காரணம் எனக்குத் தெரியவில்லை.
கரங்களை பாட்டியும் திறப்பதில்லை.
பரீட்சைக்குப் படித்து விட்டு - இரவுகளில் வெகுநேரத்துக்குப் பின்னர் தூங்கிப்போனாலும் - காத்திருந்து பாட்டி வருவாள்! அவசரமாகச் சிரிப்பாள். மூடிய கரங்களைக் காட்டுவாள்.
எனக்குப் பரீட்சை முடிந்தது.
குடும்பத்தோடு- கிராமத்துக்கு போகும் கட்டாயம் ஏற்பட்டது. கிராமத்தில் பாட்டி வாழ்ந்த காணித்துண்டை விற்று – என் தந்தையும் பெரியப்பாவும் பங்கு கொள்வதாய் பேச்சு. பெண்பிள்ளைகளுக்கு ஏற்கனவே நிறையக் கொடுத்து விட்டதால்… இதில் அவர்கள் பங்கு கேட்க முன் வரவில்லை.
வளவில் ஆங்காங்கே பாட்டி வளர்த்த மாமரங்கள் காய்த்து குலுங்கின. காய்களும், பூக்களும் சந்தோசித்தன. பாட்டியைப் போல!
வளவு விற்கு முன் வேலியாய் நின்ற பனைகளை வெட்டி விற்பதென்றும் முடிவானது. சில நாட்கள் கிராமத்தில் என் பொழுதுகள் கழிந்தது. பனைகள் வெட்டி வீழ்த்தப்பட்டன. இராவணன் வீழ்ந்த பின் அலறி வீழ்ந்த மண்டோதரிபோல் - தலைவிரி கோலமாய் - வெட்டிய பனைகள் உழவு வண்டியில் ஏற்றப்பட்ட பின் மீண்டும் நாங்கள் வீட்டுக்கு வந்தோம்.
கிராமத்தில் எனக்கு கனவு வரவில்லை.பாட்டியும் வரவில்லை. பாட்டியைப்பார்க்க வேண்டும். ஆசையாய் இருந்தது. வீட்டுக்குப் போனதும் பாட்டி வருவாள்.
எனக்கு நம்பிக்கை சிறிதாய் இருந்தது.
இரண்டு நாட்களை தாண்டிய பின்னரும் பாட்டி – என்னைப் பார்க்க வரவில்லை.
மூன்றாம் நாளில் - பாட்டி வந்தாள் - சிரிக்கவில்லை.அவள் அழுவதாயும் தெரியவில்லை. மூடிய கரங்களைத் திறந்து காட்டினாள். சிவப்பாய் என்ன அது?... கரங்களிலே!..கனவில் வண்ணங்கள் தெரிவது சாத்தியமா?... எனக்குச் சிவப்பாய் தெரிகிறதே!... இரத்தம்தான் அது.. பாட்டி போய்விட்டாள்.
பாவம் பாட்டி! பாட்டிக்கு ஏதோ ஆகிவிட்டது. அடுத்த பகலில் பாட்டி வந்தாள். கனவில் அல்ல. நான் தான் பகலில் தூங்குவதில்லையே!... சட்டமிட்ட கட்டத்துள் புகைப்படமாய் பாட்டி என் வீட்டு மண்டபத்துச் சுவருக்கு வந்தாள். பளிச்சென்ற முகம்.பாட்டியின் போட்டோவை மாட்ட சுவரில் ஆணியடிக்கும்போது!அப்பாவின் விரலில் சுத்தியல் பட்டு - இரத்தம் கசிந்தது. அதே இரத்தம்!... பாட்டியின் கரங்களில் தெரிந்த சிவப்பில்!.
பாட்டியின் படத்துக்கு மாலைபோட்டு பொட்டு வைத்து- ஊதுபத்தி கொளுத்துவது வழக்கமாகிவிட்டது. பாட்டி இப்போதெல்லாம் என் கனவில் வருவதில்லை. பாட்டி சாமியாகிவிட்டாள். சாமிகள்தான் என் கனவில் வருவதில்லையே!..
ஆனால் பாட்டியின் கரங்களில் ஏன் இரத்தம் வந்தது?... உங்களுக்குத் தெரியுமா?...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment